I'm சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா, தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர். மிக பரந்த வாசகர் பரப்பை கொண்டவர். அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன. அடுத்த மனிதரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்காமலும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்ற கருத்தை முன்வைப்பவை சாரு நிவேதிதாவின் படைப்புகள். இறுக்கம் மிகுந்த நவீன வாழ்வில் சக மனிதன் மீதும், பிராணிகள் மீதும், இயற்கை மீதும் அன்பை போதிப்பவை சாரு நிவேதிதாவின் எழுத்து.
இவரது நாவல் ஸீரோ டிகிரி, சுவிட்சர்லாந்தின் யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு [1] 2013-ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ், 2001 – 2010 தசாப்தத்தின் [2][3] இந்தியாவின் முதன்மை பத்து மனிதர்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்தது. தி இந்து தனது தீபாவளி மலரில், தமிழகத்தின் மனதில் பதிந்த முகங்களில் ஒருவராக 2014-ஆம் ஆண்டு இவரைத் தேர்ந்தெடுத்தது. இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், மலையாள மொழிபெயர்ப்பில் வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ் தவிர ஆங்கிலத்திலும் உலக அளவில் இவரது எழுத்துக்கு வாசகர்கள் உண்டு.
புதிய எக்ஸைல், ஸீரோ டிகிரி, ராஸ லீலா உள்ளிட்ட நாவல்களும், கோணல் பக்கங்கள், தப்புத் தாளங்கள், மனம்கொத்திப் பறவை, வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் இவரது படைப்புகளுள் முக்கியமானவை.