I'm சின்ன அண்ணாமலை
சின்ன அண்ணாமலை. (இயற்பெயர்: நாகப்பன்; ஜூன் 18, 1920- ஜூன் 18, 1980)எழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாளர், திரைப்படக் கதாசிரியர், தயாரிப்பாளர், சுதந்திரப் போராட்ட வீரர். தமிழ்ப் பண்ணை’ என்னும் பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தியவர். சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தின் தலைமைப்பொறுப்பிலும் இருந்தார்.
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளைக்கு ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தார் சின்ன அண்ணாமலை. அந்த விழாவில் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரும் கலந்து கொண்டார். விழாவில் கலந்து கொண்ட ராஜாஜி, அண்ணாமலையின் சேவைகளைப் பாராட்டிப் பேசும் போது, அவரைத் தனித்துக் குறிப்பிட வேண்டி ‘சின்ன அண்ணாமலை’ என்று குறிப்பிட்டார். நாளடைவில் அந்தப் பெயரே நிலைத்தது. அப்பெயரிலேயே எழுதினார்.
சின்ன அண்ணாமலை கல்கியில் சில கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார். “சீனத்துச் சிங்காரி” என்பது சின்ன அண்ணாமலை எழுதிய முதல் சிறுகதை. அவரது சிறுகதைகள் பின்னர் தொகுக்கப்பட்டு அதே தலைப்பில் நூலாகவும் வெளிவந்தது.
சின்ன அண்ணாமலை தன் வாழ்க்கை வரலாற்றை ‘சொன்னால் நம்பமாட்டீர்கள்’ என்னும் தலைப்பில் குமுதம் வார இதழில் தொடராக எழுதினார். பின்னர் அது நூலாக வெளியாகியது.
‘குமரி மலர்’ என்ற இதழை நடத்தி வந்த ஏ.கே.செட்டியார் சின்ன அண்ணாமலையை சென்னைக்கு அழைத்து வந்தார். குமரி மலரில் சிலகாலம் பணியாற்றினார்.
1946-ல் வெள்ளிமணி வார இதழைத் தொடங்கினார் சின்ன அண்ணாமலை. சாவி அதன் ஆசிரியராக இருந்தார். அதில் ‘சங்கரபதிக் கோட்டை’ என்ற தொடரை எழுதினார் அண்ணாமலை. கல்கியுடன் இணைந்து இந்தியா முழுக்கப் பயணம் மேற்கொண்டு அந்த அனுபவங்களை ‘காணக் கண் கோடி வேண்டும்’ என்ற தலைப்பில் எழுதினார்.
தமிழ் ஹரிஜன் இதழ்
காந்தி ‘ஹரிஜன்’ என்ற ஆங்கில இதழை நிறுவி நடத்தி வந்தார். அதில் காந்தியின் பல கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அதனை அறிந்த சின்ன அண்ணாமலை, காந்தியை நேரடியாகச் சந்தித்து அந்த இதழைத் தமிழில் நடத்த அனுமதி பெற்றார். தமிழில் ‘தமிழ் ஹரிஜன்’ என்ற பெயரில் அந்த இதழ் வெளியானது. நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை மற்றும் பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை இருவரும் அதன் ஆசிரியராக இருந்தனர்.
‘சங்கப் பலகை’ என்ற இதழையும் நடத்தி வந்தார் அண்ணாமலை.
சிவாஜி ரசிகர்மன்றத் தலைவராக சிவாஜி ரசிகன் என்னும் இதழையும் சின்ன அண்ணாமலை நடத்தினார்