I'm டாக்டர் ரா சீனிவாசன்
ரா. சீனிவாசன் (ராமானுஜலு சீனிவாசன்: 1923-2001) தமிழ்ப் பேராசிரியர். ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, குறள், மணிமேகலை போன்ற இலக்கியங்களைப் பற்றி ஆராய்ந்து நூல்கள் எழுதியுள்ளார். பொது வாசிப்புக்குரிய நாவல்களை, சிறுகதைகளை எழுதியவர்.
ரா. சீனிவாசன், தேசியப் பற்றும்,காந்திய ஈடுபாடும் கொண்டவராக விளங்கினார். சங்க இலக்கியங்கள் மீதும் பக்தி இலக்கியங்கள் மீதும் அதிகம் ஈடுபாடு காட்டினார். டாக்டர் மு.வ. அவர்களைத் தனது இலக்கிய வழிகாட்டியாகக் கொண்டார். அவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். காண்டேகர், கல்கி, சாமர் செட்மாம், வேர்ட்ஸ்வொர்த், பெர்னாட்ஷா போன்றோரின் படைப்புகளாலும் கவரப்பட்டார். மு.வ.வைப் போலத் தானும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் கொண்டு இலக்கிய உலகில் இயங்கினார். எழுத்தார்வத்தால் கதைகளும், கட்டுரைகளும் எழுதினார். இலக்கிய ஆர்வத்தால் பல்வேறு இலக்கிய நூல்களுக்கு உரை எழுதி வெளியிட்டார். தொடர்ந்த இலக்கியச் செயல்பாடுகளால் மொழி அறிஞராகவும், சிந்தனையாளராகவும், நாவலாசிரியராகவும் தன்னை வளர்த்துக் கொண்டார்.
தனது நூல்களை வெளியிடுவதற்காகவே ‘அணியகம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கி அதன் மூலம் பல நூல்களை வெளியிட்டார். ‘சிலம்பின் கதை’, ‘சிலப்பதிகாரம் மூலமும் திறனாய்வுமும்’, ‘சீவக சிந்தாமணி’, ‘திருவிளையாடல் புராணம்’, ‘தமிழ் இலக்கிய வரலாறு’, ‘திருக்குறள் மூலம்’, ‘திருப்பாவை விளக்க உரை’ போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த இலக்கியப் படைப்புகளாகும்.
ரா. சீனிவாசனின், ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் ஆய்வு நூல் மூன்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டது. ‘மொழியியல்’ பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளிவந்தது. அவர் எழுதிய உரைநடை நூல்களுள் ‘அணியும் மணியும்’ குறிப்பிடத்தகுந்தது. ‘சொல்லின் செல்வன்’ என்னும் நாடக நூலும், ‘வழுக்கு நிலம்’, ‘நனவோட்டங்கள்’ என்னும் நாவல்களும் பல்கலைக் கழகப்பாடநூல்களாக வைக்கப்பட்டன. ‘வித்தகன்’ என்ற புனைபெயரில் ‘மலரினும் மெல்லியது’ என்ற நாவலை எழுதியுள்ளார். ‘சுழிகள்’ எனும் நாவல் ‘புத்தக விமர்சனத்தில்’ தொடர்கதையாக வெளிவந்துள்ளது.
மு.வ.வின் ‘நெஞ்சில் ஒரு முள்’ எனும் நாவலுக்கு ரா. சீனிவாசன் முன்னுரை எழுதியிருக்கிறார். ரா. சீனிவாசன் தனது எழுத்து பற்றி “என் உரைநடை நூல்கள் புதுக் கவிதையின் தாக்கம், கவித்துவம் நிறைந்தவை; என் எழுத்துப் பயிற்சி புதுக்கவிதை படைக்கத் துணை செய்தது.” என்கிறார்.